அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்.20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. எனினும், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத இதர பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது.

தொடர்ந்து, தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாக பள்ளி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் இதுதொடர்பான புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 40 சதவீத கட்டணத்தை வசூலிக்காமல், பள்ளிகள் முதற்கட்டமாகவே முழு கட்டணத்தையும் வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கின்றனர்.

அதனால், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நீதிபதி, எந்தெந்த பள்ளிகள் உத்தரவை மீறி முழுமையான கட்டணத்தை வசூல் செய்கின்றன என்ற பட்டியலை வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட அவர், தொடர்ந்து அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x