தமிழகம் முழுவதும் வரும் 10-ல் காய்கறி, பூ சந்தைகள் மூடல்

சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ மார்க்கெட் மூடப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
சென்னை கோயம்பேடு சந்தை உள்பட தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து சந்தைகளையும் திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ மார்க்கெட் மூடி எதிர்ப்பு தெரிவிக்கப்படும். சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவில்லை.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமழிசையில் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த மே 5-ம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், இதுவரை அதனை திறப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் வியாபாரிகள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.