ராணுவத்தில் உயர் பதவிகளில் பெண்கள் பணியாற்ற வரும் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் உயரதிகாரிகளாக தொடர்ந்து பணியாற்ற விருப்பமுள்ள பெண் ராணுவ அதிகாரிகள் அதற்கான விண்ணப்பத்தை வரும் 31-ம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென ராணுவ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் கடந்த 1992-ம் ஆண்டு தான் பெண்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் குறைந்த கால ராணுவ சேவை என்ற அடிப்படையில் 5 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து ராணுவ அதிகாரிகளாக சேர்ந்த பெண்கள், தங்களையும் ராணுவத்தின் போர்முனை பிரிவுகளில் சேர்த்து, ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பதவி உயர்வளிக்க வேண்டும், தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்ற அணுமதிக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமும், ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பர்மனென்ட் கமிஷன் தேர்வில் பெண்களுக்கும் பணி அளிக்க வேண்டுமென்றும், இதற்காக ராணுவம் அதன் சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து உயரதிகாரிகளாக தொடர்ந்து பணியாற்ற விருப்பமுள்ள பெண் ராணுவ அதிகாரிகள் அதற்காண விண்ணப்பத்தை வரும் 31-ம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென ராணுவ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.