மக்கள் கையில் பணப்புழக்கம்; அரசுக்கு ஸ்டாலின் 7 ஆலோசனைகள்!

மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது உள்ளிட்ட ஏழு பொருளாதார ஆலோசனைகளை, தமிழக அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அதே நேரம், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் தற்போது உள் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் மருத்துவம், பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், அரசுக்கு ஏழு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

1) ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சமாளிப்பதற்கு, அனைவருடைய கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்.

2) ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்த 1,000 ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாகப் பணமாக வழங்கப்பட வேண்டும்.

3) ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்குச் செல்வதை முறைப்படுத்தலாம். ஆனால், அறவே தடை செய்யக் கூடாது. பொருட்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.

4) சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.

5) வேலையில்லாமல் தவிக்கும் கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்திட வேண்டும்

6) அரசாங்கம் மூலதனச் செலவினங்களைச் சுகாதாரத் துறையிலும், தேவையான பிற தேவைகளிலும் அதிகரிக்க வேண்டும். இது பணப்புழக்கத்தை மேம்படுத்துவதோடு தற்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்கும் உதவும்.

7) ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். தற்போதைய ஜிஎஸ்டி கட்டமைப்பில், மத்திய அரசு மிக நீண்ட நிலுவைத் தொகையைக் கொண்டிருப்பதால், மாநில அரசுகளுக்குச் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆதலால், கொரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொருளாதாரம் குறித்த தனது ஏழு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x