இலவச ஆங்கில பயிற்சி – அரசு மாணவ மாணவியர்களுக்கு அரிய வாய்ப்பு!!!

பனமரத்துப்பட்டி:
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர், கிராமப்புற மாணவ, மாணவியருக்கு, இலவசமாக ஆங்கில பயிற்சி அளிக்கிறார்.
சேலம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி, முத்தானூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 103 மாணவ, மாணவியர் உள்ளனர். அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தெய்வநாயகம், 52. இவர், குரால்நத்தம் கிராம மாணவ, மாணவியருக்கு, இலவசமாக ஆங்கில பயிற்சி அளிக்கிறார். சேலத்திலிருந்து தினமும், முத்தானூர் மாரியம்மன் கோவிலுக்கு வருகிறார். அங்கு, மாணவ, மாணவியருக்கு ஆங்கில இலக்கணம் சொல்லி தருகிறார். கிராம மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்து, ஆங்கிலத்திலுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கின்றனர்.
அவர் எழுதிப்போடுவதை குறிப்பெடுக்கின்றனர். இதுகுறித்து, தெய்வநாயகம் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பள்ளிகளுக்கு விடுமுறையால், மாணவர்கள் வீட்டில் உள்ளனர். ‘டிவி, மொபைல் போன்’ ஆகியவற்றை பார்த்தும், விளையாடியும் பொழுதை போக்குகின்றனர். பெற்றோர் கோரிக்கைப்படி, ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன், எழுதும் திறன், இலக்கணம் கற்றல் ஆகியவை கற்பிக்கிறேன். நவம்பர் முதல், காலை, 11:00 முதல், 2:00 மணி வரை, ஆங்கில இலக்கணம் கற்பிக்கப்படுகிறது. 5 முதல், 10ம் வகுப்பு வரையான மாணவர்கள், ஆர்வத்துடன் வந்து கற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.