“நடிக்காதீங்க பிரியங்கா” – வாழ்த்து தெரிவித்த பிரியங்காவுக்கு கண்டனம் தெரிவித்த MPஅசாதுதீன் ஓவைசி!!!

இந்தியா முழுவதும் இப்போது ராமர் கோவில் கொண்டாட்டங்கள் தான் முக்கிய பேசு பொருளாக உள்ளன. அனைத்து கட்சியினரும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராமர் கோவில் பூமி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தைரியம், கட்டுப்பாடு என பல குணங்களை ஒருங்கே அமைய பெற்றது தான் ராம் என்னும் பெயர். ராமர் நம் அனைவரிடத்திலும் இருக்கிறார். ராமர், சீதா இருவரின் அருள், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை பறைசாற்றும் சந்தர்ப்பமாக மாறும்” என்று அதில் கூறி உள்ளார்.
அவரின் இந்த பதிவுதான் இப்போது அவருக்கே கண்டன குரல்களாய் சமூக வலைதளங்களில் மாறி இருக்கிறது. இந்த பதிவை கண்டு கொதித்து போய் இருக்கிறார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி. அவர் காங்கிரசையும், பிரியங்கா காந்தியையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அவர், “இந்த பதிவின் மூலம் அவர்கள் (காங்கிரசும், பிரியங்கா காந்தியும்) நடிக்கவில்லை என்பது தெரிகிறது. அதற்கு மிக்க மகிழ்ச்சி. இந்துத்துவாவை அவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். ஆனால் சகோதரத்துவத்தை பற்றி எதற்கு ஆதரவான பேச்சு? வெட்கப்படாமல் பாபர் மசூதி இடிப்புக்கு காரணமான இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி அளித்த பங்களிப்புகளை பற்றி பெருமிதமாக இருங்கள்” என்று தனது கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்திலேயே காட்டமாக கூறி இருக்கிறார்.