ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி, கோமா நிலையில் இருந்து மீண்டார்..

விஷம் கொடுக்கப்பட்ட ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கோமா நிலையில் இருந்து மீண்டதாவும், தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெர்மனியில் அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை தெரிவித்தது.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்தவர் அலெக்ஸி நவால்னி (44). ரஷியாவில் கடந்த மாதம் 20-ஆம் தேதி விமானத்தில் பயணித்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அரசியல் எதிரிகளால் அவரது உயிருக்கு ஆபத்து என்று கருதி நவால்னிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க நெருக்கடி அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நவால்னியின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கோமா நிலையில் இருந்த நவால்னிக்கு நினைவு திரும்பியது. அவர் செயற்கை சுவாசக் கருவி மூலமாக சுவாசித்து வந்தார். தற்போது அவர் சுயமாக சுவாசிக்கிறார். அவருக்கு கடுமையான விஷம் தரப்பட்டுள்ளது. அதனால் அவரின் உடலில் ஏற்படும் நீண்ட கால பாதிப்புகளை தற்போது மதிப்பிடுவது சாத்தியமல்ல’ என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 22-ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் நவால்னி கோமாவில் இருந்தார். அவருக்கு “நோவிசோக்’ என்ற நஞ்சு தரப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்ததாக ஜெர்மனி அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர். இந்த “நோவிசோக்’ நஞ்சு ரஷிய விஞ்ஞானிகளால் கடந்த 1971-1993-ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.