“சட்டவிரோதமாகவும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் நம்மிடம் இருந்து பறித்தவற்றை நாம் திரும்பப்பெற வேண்டும்” – மெஹ்பூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது மத்திய அரசு.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு, அப்பகுதிகளில் விதித்தது. அணிவகுப்பு மற்றும் பேரணிகளைத் தடை செய்தல், இணையதள சேவை மற்றும் மொபைல் சேவைகளைத் தடை செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களும் அப்பகுதியில் அதிக அளவில் நிறுத்தியது மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களையும் தடுப்புக் காவலில் வைத்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், அங்கு, படிபடியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த தலைவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வந்தனர். இருப்பினும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி மட்டும் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இதனிடையே அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. மெஹ்பூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது. அவரின் விடுதலை தொடர்பாக நீதிமன்றமும் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில் 14 மாதங்களாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் அறிவித்துள்ளார். மெஹ்பூபா முப்தியின் ட்விட்டர் பக்கத்திலும் அவரது விடுதலை தொடர்பாக கருத்துகள் பதியப்பட்டு இருந்தது.

விடுதலை செய்யப்பட்டப் பின்னர் மெஹ்பூபா முப்தி ஆடியோ மூலம் மக்களிடம் பேசுகையில், “டெல்லி தர்பார் சட்டவிரோதமாகவும் ஜனநாயகத்துக்கு எதிராகவும் நம்மிடம் இருந்து பறித்தவற்றை நாம் திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமல்ல, காஷ்மீரின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காகத்தான் எத்தனையோ காஷ்மீரிகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அதனை நாம் பெறுவதற்கான பாதை நிச்சயம் எளிதானதாக இருக்காது. ஆனால் கடினமான முயற்சிகள் தொடர வேண்டும். இன்னும் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். வரும் வெள்ளிக்கிழமை அன்று மெஹ்பூபா, செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x