ctrl+alt+delete: சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடியூப் சேனல்களை காலி செய்த கூகுள்!

இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போது அமெரிக்கா – சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக், வி சேட் ஆப்களுக்கு கெடு விதித்துள்ள நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடியூப் சேனல்களை சத்தமே இல்லாமல், கடந்த ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில் காலி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தவறான தகவல் தருவது, பொய் செய்தியை பரப்புவது, உளவாளியாக வேலை செய்வது போன்ற செயல்களில் இந்த 2500 யூடியூப் சேனல்கள் செயலாற்றி வந்ததாக கூகுள் நிறுவனம் குற்றம் சுமத்தி இருக்கிறது.
கடந்த புதன் கிழமை நம்பிக்கைக்கு பாத்திரமாகாத சீன செயலிகளையும், வெப்சைட்டுகளையும் அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை ஒரு எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் சீன நிறுவனம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என கெடு விதித்துள்ளது டிரம்ப் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை சீன அரசுக்கு எதிராக இருப்பதாகவும், டெலிட் செய்யப்பட்ட 2500 யூடியூப் சேனல்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட வேண்டும் உள்ளிட்ட சர்ச்சைகளும் கூடவே எழுந்து இருக்கிறது.
அமெரிக்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 2016ம் ஆண்டு தேர்தலில் நடைபெற்றது போல டிஜிட்டல் பிழைகள் நடக்காமல் இருக்கவும், ரகசியங்கள் காக்கப்படவும் பல ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.