கொரோனாவிலிருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சாமானியன் முதல் அமைச்சர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 5ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார். அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.