“நீங்கள் இந்தியரா?” என கேட்ட சிஐஎஸ்எஃப் காவலரிடம் “நறுக்குன்னு” பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி.!!

நாளை திங்கள்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற துறைசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற, சென்னை விமான நிலையத்துக்குக் கனிமொழி வந்தார்.
இதையடுத்து கனிமொழி விமான நிலையத்துக்கு வந்தபோது, சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில், தனது விமான நிலைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட கனிமொழி, “இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி தெரிந்தால் தான், இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு அவரை பின்தொடருவோர் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு, மொழி திணிப்பு கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, விமான நிலைய சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு அதிகாரி பேசியதாவது “சம்பவம் தொடர்பான தகவல், கனிமொழி எம்.பியின் டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்த பிறகே தங்களின் கவனத்துக்கு வநதுள்ளதாகவும், எந்த அடிப்படையில் அந்த பெண் அதிகாரி கனிமொழியிடம் அவ்வாறு கேட்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கனிமொழி ஒரு எம்.பி என்பதால், அதற்குரிய சம்பிரதாய வழிமுறைகளின்படி அவருக்கு விமான நிலையத்தில் தரப்பட்டிருக்க வேண்டிய முன்னுரிமை அல்லது முக்கியத்துவத்தில் ஏதேனும் குறைபாடு எழுந்ததா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.