கோழிக்கோடு விமான விபத்து – மீட்புப் பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமை!
கேரளாவின் கோழிக்கோடில் விமான விபத்தில் சிக்கிய 2 பேருக்கு கொரோனா இருந்ததால் அவர்கள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பரவியிருக்கக் கூடும் என்பதால் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்று பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்தது.
இதில் விமானத்தின் பைலட்டுகள் இருவர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். அவர்களில் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வர தாமதமானதால் அப்பகுதியினர் தங்கள் கார்கள் மூலம் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் இருவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள், பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் உள்பட 600 பேர் சுயதனிமை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.