“போதுமான கொரோனா தடுப்பூசி கிடைக்க இன்னும் 4 ஆண்டுகள் ஆகும்!” சீரம் இன்ஸ்டிட்யூட் சிஇஓ தகவல்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, 2024ஆம் ஆண்டு வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி போதுமான வகையில் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனிகா நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீரம் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆனால், பிரிட்டனில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்களில் ஒருவருக்கு அசாதாரணமான உடல் பக்க விளைவு தென்பட்டதால், மறு உத்தரவு வரும் வரை அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவிலும் சீரம் நிறுவன பரிசோதனை நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்துக்கு சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா காணொளி மூலம் பேட்டியில், “குறைவான காலகட்டத்தில் உலக மக்கள் தொகைக்கு தேவையான வைரஸ் தடுப்பூசி மருந்தை விரைவாக உற்பத்தி செய்யும் திறனை மருந்தக நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை. பூமிக்கிரகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது இரண்டு முறை போடக்கூடியதாக இருக்கும். தட்டம்மை ரோட்டோவைரஸ் போல இரண்டு முறை போடக்கூடிய அந்த மருந்து தேவையென்றால், உலக அளவில் 15 பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை. கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் சாதகமான அம்சங்கள்  இருந்தாலும், தேவையான இலக்கை எட்டுவதற்கான அளவுகோலில் இன்னும் போதிய தூரத்தை கூட மருந்தக தயாரிப்பு நிறுவனங்கள் நெருங்கியதாக நான் கேள்விப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சமீபத்திய கருத்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தொடர்பாக வெளிவரும் கருத்துகளுடன் முரண்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x