‘2ஜி’ வழக்கில், தி.மு.க.,வின் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை, விரைவாக விசாரிக்க வேண்டும் என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 2018ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய டெல்லி சி.பி.ஐ., நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கின் விசாரணையை விரைவாக நடத்த அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தது.
இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி, இந்த மேல்முறையீட்டு மனுக்களை, ஏற்கனவே விசாரித்து வரும் நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன்பு பட்டியலிட உத்தரவிட்டார்.
