தமிழக சிறப்பு ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 31ம் தேதி வரை 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது.
இருப்பினும், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி – செங்கல்பட்டு இடையேயான சிறப்பு ரயில் சேவையும், மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் அதிகவேக இன்டர்சிட்டி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.
கோவையிலிருந்து காட்பாடிக்கு செல்லும் அதிவேக இன்டர்சிட்டி ரயிலும், அரக்கோணத்திலிருந்து கோவைக்கு இயக்கப்படும் அதிவேக சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று, கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் ஜனசதாப்தி சிறப்பு ரயிலும், திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அதிவேக இன்டர்சிட்டி சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு, முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் என அறிவித்துள்ள தெற்கு ரயிவ்வே, சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் ராஜ்தானி சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.