தோனியின் திட்டத்தை மாற்றிய கொரோனா: திடீரென ஓய்வை அறிவித்தார்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை தோனியின் தலைமையின் கீழ் பெற்றது. 2004 ம் ஆண்டு இந்திய அணியில் இணைந்த மகேந்திர சிங் தோனி, 2007 முதல் 2016 வரை கேப்டனாக அணியை வழி நடத்தினார். 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வை அறிவித்தார்.
விராட் கோலி அணிக்கு தலைமையேற்ற சமயத்திலிருந்தே தோனியின் ஓய்வு குறித்துப் பல முறை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பி.சி.சி.ஐ., அறிவித்த இந்திய அணியிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அப்போது தானாக முன் வந்து தோனி ஓய்வு அறிவிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த நான்கு மாதமாக கொரோனாவால் விளையாட்டுத் துறை சுணங்கியுள்ள நிலையில் இன்று மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி. பழைய இந்தி பாடலுடன் தனது பழைய புகைப்படங்களை தொகுத்து பதிவிட்டுள்ளார். அதில், இதுவரையிலான உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி என கூறியுள்ளார்.
தோனி, இதுவரை 350 ஒரு நாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.