நியுசிலாந்தில் பரவி வரும் கொரோனாவால் தள்ளிப்போகிறது பொதுத்தேர்தல்!

பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக நியூசிலாந்து நாட்டு பொதுத் தேர்தல் மேலும் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், தொற்று பரவலைக் முதலில் கட்டுக்குள் கொண்டு வந்தது நியூசிலாந்து. இதனால் கொரோனா இல்லாத முதல் நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ச்சியாக 102 நாட்கள் கொரோனா இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் அக்டோபர் 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், தேர்தல் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘மேலும் சில காலம் கொரோனா நம்முடன் இருக்கும். அதற்காக தேர்தலை தொடர்ந்து தள்ளி வைப்பது நோய் பரவலின் அபாயத்தை குறைக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் ஜெசிந்தா ஆர்டனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதனால் வரும் தேர்தலிலும் அவரே வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா அச்சத்தால் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.