எஸ்.பி.பி., சீக்கிரம் குணமடைய ரஜினி பிரார்த்தனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பி., விரைவில் குணமடைய வேண்டும் என ரஜினி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் எஸ்.பி.பி., லேசான கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். தான் நலமாக இருப்பதாகவும், கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றும், ஓய்வெடுக்க மருத்துவமனைக்கு வந்ததாகவும், விரைவில் வீடு திரும்பிவிடப் போவதாகவும் தெரிவித்து எஸ். பி. பாலசுப்பிரமணியம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. உடனடியாக ஐ.சி.யூவிற்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தினர். நுரையீரலை தொற்று பாதித்ததாக கூறப்பட்டது. லண்டன் சிறப்பு டாக்டர்கள் வருகை தந்து எஸ்.பி.பி.,க்கு சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் உடல்நிலை ஓரளவு தேறியுள்ளது.
இது பற்றி வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் ரஜினி, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி ரசிகர்களை மகிழ்வித்த எஸ்.பி.பி., தீவிர சிகிச்சையிலிருந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.