பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை..

பஞ்சாப் மாநிலத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் பரித்கோட் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தவர் குர்லால் சிங் புல்லார். இவர் இன்று அவரது கார் அருகில் நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் குர்லால் நோக்கி சரமாரியாக சுட்டனர். 12 முறை சுட்டத்தில் குர்லால் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குர்லால் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங், போலீசார் உடனடியாக இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள போலீசார், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.