ஆதரவற்ற 10 முதியோரை சாலையில் தூக்கி வீசிய பணியாளர்கள்..?

மத்திய பிரதேசத்தில் ஆதரவற்ற 10 முதியோர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பலரது கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களை இந்தூர் நகராட்சி பணியாளர்கள் பிடித்து லாரியில் ஏற்றி, அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் அவர்களில் சிலரை மனிதாபிமானமற்ற முறையில் சாலையில் இறக்கி விட்டு சென்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது. இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் வெளியிட்டார். இந்த சம்பவத்தில், ‘அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றும் பணியாளர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நகராட்சி துணை ஆணையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேவேளையில், முதியவர்கள் அரசு இல்லங்களுக்கு திரும்பி விட்டனர். இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ சஞ்சய் சுக்லா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பிரதீபா பால் கூறுகையில், ‘குளிர் காலத்தில் இதுபோன்று ஆதரவில்லாமல் சுற்றி திரிபவர்களை மாநகராட்சி பணியாளர்கள் அரசு காப்பகத்திற்கு கொண்டு செல்வார்கள். சிலர் செல்ல தயாராக இருப்பர். ஆனால், அவர்களில் சிலர் வேறு இடங்களுக்கு சென்றுவிடுவர்’ என்றார்.