“பிராமணர்கள் பாதுகாப்பிற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்” காங்கிரஸ் தலைவரின் அடேங்கப்பா கோரிக்கை!

உத்திரப்பிரதேசத்தின் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதல் துவங்குகிறது. இதில் பிராமணர்கள் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுக்க அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.
உபியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் பிராமணர்கள் ஆதரவு அரசியல் தலைதூக்கத் துவங்கி விட்டது. பாஜக ஆளும் அம்மாநிலத்தின் எதிர்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் பிராமணர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் இதற்காகவே ‘பிராமண் சேத்னா பரிஷத்’ எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். அதன் சார்பில் அவர் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உபி சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் துவங்குகிறது. இது குறித்து காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் கடிதத்தில், “தம் கட்சிகளின் நிலைக்கும் அப்பாற்பட்டு அனைத்து எம்எல்ஏக்களும் பிராமணர்கள் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். உபியின் அனைத்து பகுதிகளிலும் பிராமணர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை தடுக்க அனைவரும் சட்டப்பேரவயில் குரல் கொடுக்க வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, தாம் புதிதாகத் துவக்கி நடத்தி வரும் பிராமண் சேத்னா சமிதியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஒரு புதிய தீர்மானத்தையும் பிரசாத் நிறைவேற்றி உள்ளார். அதில் “உத்திரபிரதேசத்தில் இதுவரை 700 பிராமணர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாஜக பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே வரும் 2022 சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பிராமணரை முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்” எனவும் கோரியுள்ளார்.
மேலும், 700 பிராமணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உபி மாநிலக் காவல்துறை சார்பில் ஒரு புள்ளிவிவரம் கசிய விடப்பட்டுள்ளது. இதில் உபியில் இதுவரை நடைபெற்ற என்கவுண்டர்களில் முஸ்லிம்கள் தான் அதிகமாகக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
அப்புள்ளிவிவரத்தில், கடந்த 42 மாதங்களில் நடைபெற்ற 124 என்கவுண்டர்களில் அதிகமாக 47 முஸ்லிம்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். 11 பிராமணர்களும், 8 யாதவர்களும் மற்ற சமுதாயத்தினர் 58 பேர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில், தாக்குர், வைஷ்ணவர் தலீத் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடம் பெற்றுள்ளனர்.’ எனக் கூறப்பட்டுள்ளது.
உபியில் இதுவரை பதவியில் இருந்த முதல் அமைச்சர்களில் பிராமணர்கள் அதிகம். இவர்களது சமூத்தினர் உபியில் அதிகமாக 12 சதவிகிதம் இருப்பது அதன் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அயோத்தியின் ராமர் கோயில் கட்டத் துவங்கிய பின் பிராமணர்கள் வாக்குகள் பாஜக பக்கம் சாயத் துவங்குவதாக எதிர்கட்சிகள் அஞ்சுகின்றனர். இதை தடுக்கும் முயற்சியில் அனைவரும் பிராமணர் ஆதரவு அரசியலை துவக்கி உள்ளனர்.