துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்.. யூடியூப்பை பார்த்து கற்றுகொண்டதாக அதிர்ச்சி தகவல்!!

புதுக்கோட்டையில் துப்பாக்கி தயாரித்த இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் உடையநேரி காலனி பகுதியில் துப்பாக்கி தயாரிப்பில் சிலர் ஈடுபடுவதாக கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சிவா(19), மாரிமுத்து (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் அந்த வீட்டிலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியையும், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய இரும்பு குழாய் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், யூடியூபில் துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக பார்த்து, விற்பனைக்காக துப்பாக்கியை தயாரித்ததாக கைதான இருவரும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சிவா, மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.