ஜூலை 10 முதல் குடிநீர் சேவை கிடையாது; தண்ணீர் லாரி சங்கம் போர்கொடி!

ஜூலை 10ம்தேதி முதல் குடிநீர் சேவைக்கான தண்ணீர் லாரிகள் இயங்காது என லாரிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருபுறம் கொரோனா ஊரடங்கால் பலரும் வியாபாரம் இன்றி, வேலையின்றி பொருளாதாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் மத்திய அரசும் தன் பங்குக்கு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக்கொண்டே செல்கிறது. இதன் எதிரொலியாக, லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த இரண்டு பக்க இடியால், மக்கள் விரக்தி மனநிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மக்களுக்கு குடிநீர் சேவை வழங்கி வரும் டேங்கர் லாரிகள் சேவை நிறுத்தம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். லாரி ஓட்டுனர்கள் அதிகப்படியான சம்பளம் கேட்பது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் எரிபொருள் செலவும் கட்டுப்படியாகவில்லை என்று லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தண்ணீர் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பெட்ரோல் டீசலின் விலை நாள்தோறும் உயர்ந்துகொண்டே செல்வதாலும், லாரி ஓட்டுனர்கள் அதிகப்படியான சம்பளம் கேட்பதாலும் 30 சதவிகித ஊக்க தொகையை அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். தர மறுத்தால் வருகின்ற ஜூலை 10ம்தேதி முதல் தண்ணீர் லாரிகள் இயங்காது.” என்று குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி வேலை நிறுத்தம் நடந்தால், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாகும் சூழல் உருவாகியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x