2 மணி நேரம் சாலையிலேயே கிடந்த முதியவர் மரணம்… அதிரவைக்கும் பின்னணி

ஆந்திரா குண்டூர் அருகே, மருத்துவமனைக்கு சென்ற முதியவர் மயங்கி விழுந்த நிலையில், சாலையிலேயே இரண்டு மணி நேரம் கிடந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சத்தலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முதியவர் வெங்கட கிருஷ்ணாராவ். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அந்த ரிசல்ட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தார். இதற்காக, ஆட்டோவில் ஏற முயன்றபோது திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார்.
இதை, குடும்பத்தாரிடம் ஆட்டோ டிரைவர் கூறவே, வெளியே வந்து பார்த்த அவர்கள், முதியவருக்கு கொரோனா உள்ள விஷயத்தை தெரிவித்தனர். இதனால், பதறியடித்து ஆட்டோ டிரைவர் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றுவிட்டார். உறவினர்கள் யாரும் பெரியவருக்கு உதவ முன்வரவில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர்கள் வரும்வரை காத்திருந்தனர்.
பிறகு இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக முதியவர் சாலையிலேயே கிடந்த நிலையில், முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். பின்னர், அவரது உடலை நகராட்சி ஊழியர்கள் வந்து எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.