ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சாத்தான்குளம் வழக்கு சி.பி.சி.ஐ.டியிடம் இருந்து சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று சி.பி.ஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்ற காவலில் கடந்த மாதம் உயிரிழந்தனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக ஜெயராஜை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். அதனை கேட்க சென்ற பென்னிக்ஸ் மீதும் வழக்கு பதிந்து அடித்து உதைத்தனர். லத்தியை ஆசன வாயில் நுழைத்து கொடூரமாக தாக்கியதில் உள்ளுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அரசு மருத்துவர், சார்பு நீதிபதி ஆகியோர் கண்டுகொள்ளாமல் சிறையில் அடைக்க அனுமதி தந்ததாக கூறப்படுகிறது. சிறையில் உடல்நிலைக்குன்றி அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு உயிரிழந்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விஷயத்தை கையில் எடுத்தன.
நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினார். அவர் தந்த அறிக்கை நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஒரு நீதித்துறை நடுவரையே மிரட்டும் தொணியில் ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி நடந்துக்கொண்டுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தை வட்டாட்சியர் கட்டுப்பாட்டிற்கு மாற்றியது மதுரை ஐகோர்ட் கிளை. இதற்கிடையே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றினார் முதல்வர்.
முன்னதாக சி.பி.சி.ஐ.டி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் இன்று முதல் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. முதல் கட்டமாக உயிரிழந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 2 குழுக்களாக பிரிந்து விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது.
விசாரணை அதிகாரியாக சிபிஐயின் டெல்லி ஏஎஸ்பி விஜயகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவினர் உள்ளனர்.