‘பசியால் சாக முடியாது’கூட்டம் கூட்டமாக, வேலைக்கு திரும்பும்தொழிலாளர்கள்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள், வறுமை வாட்டுவதால், மீண்டும் வேலை பார்த்த மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 25ல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டில்லி, ஹரியானா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தினக் கூலிகளாக பணியாற்றி வந்த, வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

ஊரடங்கால் போக்கு வரத்து முடக்கப்பட்டதால், பல நுாறு கிலோ மீ்ட்டர் நடை பயணமாகவே குழந்தைகள், உடைமைகளுடன் சென்றனர். இவ்வாறு சென்ற தொழிலாளர்கள் சிலர், ரயில் மற்றும் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகினர்.

இந்நிலையில், தமிழகம், டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் பாதிப்பு ஓரளவு குறைவாக உள்ளது. இதனால், அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் விவசாயம், கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.

ஆனால், இவற்றில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டதால், வேலைக்கு ஆள் கிடைக்காமல் முதலாளிகள் தவிக்கின்றனர். ஏற்கனவே பணியாற்றிய தொழிலாளர்களை தொடர்பு கொண்டு, முன்பை விட அதிக சம்பளம் தருவதாகவும், கணிசமான முன் பணம் தருவதாகவும் கூறி, அவர்களை மீண்டும் வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில், விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் பலரும் திண்டாடுகின்றனர், பணிகள் பாதியில் நிற்பதால், அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், கட்டுமான பணிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, சொந்த மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு, அங்கு வேலைவாய்ப்பு இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல், பசி பட்டினியால் தவித்து வருகின்றனர். இதையடுத்து, உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து, பஞ்சாப், ஹரியானா, தெலுங்கானா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு, ஏராளமான தொழிலாளர்கள் மீண்டும் திரும்பத் துவங்கி உள்ளனர்.

முதலாளிகளில் சிலர், ‘விமான டிக்கெட் கூட எடுத்து தருகிறோம்; தயவு செய்து வேலைக்கு வாருங்கள்’ என, கெஞ்சத் துவங்கிஉள்ளனர். சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x