தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக குஜராத் முதல்வர் மனைவி அஞ்சலி மீது மாநில காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாயன்று நடைபெற்றது. இதில் மார்பி தொகுதியில் தங்கியிருந்த பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்வர் விஜய் ரூபானியின் மனைவி அஞ்சலி தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாலுபாய் படேல், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முரளி கிருஷ்ணாவிடம் அளித்த புகாரில், ‘மார்பி தொகுதிக்கு அன்னியர் என்ற போதிலும் முதல்வரின் மனைவி அஞ்சலி அங்கேயே தங்கியிருந்தது மட்டும் அல்லாமல், தேர்தல் தினமான இன்று உள்ளூர் பாஜக தலைவர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். எனவே அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுவதுடன், அவர்மீது கிரிமினல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளின் படி வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே தொகுதியில் இருந்து அந்நியர்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
