தமிழகத்தில் அருந்ததியின மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின் அதிகாரம் செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திமுகவின் சமூகநீதி கொள்கைக்கும் கலைஞரின் முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக நீதியுடன் செயல்படும் பேரியக்கம் திமுக.
1971ல் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியவர் கலைஞர். 1990ல் பழங்குடியின மக்களுக்கு தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதனை 19 சதவீதமாக உயர்த்தியவரும் கலைஞர்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (BC, MBC)மக்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீடுகளுடன் தனித்துவம் பெற்று நிற்கிறது தமிழகம்.
சமூக பொருளாதாரத்தில் மிகவும் அடித்தளத்தில் அருந்ததியினர் இருப்பதால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட முடிவு செய்து 2008ல் 3% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. 2009ல் அது அரசிதழில் வெளியிடப்பட்டது.
இன்றுவரை அருந்ததியினர் சமுதாயத்தினர் முன்னேற்றத்தில் அந்த உள்ஒதுக்கீடு வரப்பிரசாதம். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்டி உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புக்கு திமுக சார்பில் நன்றி.” இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
