“நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்தால் பிளஸ் 2 மாணவியருக்கு ரூ.25 ஆயிரம்” – நிதிஷ் குமார்

பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியமைத்தால் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவியருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், பட்டம் பெறும் பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என நேற்றைய தேர்தல் பிரசாரத்தில் நிதிஷ் குமார் கூறினார்.
பீஹாரில் சட்டசபை தேர்தல் அக். 28ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் தேர்தல் பிரசாரத்தை மாவட்ட தலைநகரான பாங்காவில் நேற்று தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: பீஹாரில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளை எங்கள் அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்ளுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசு பணிகளில் 35 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவியருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பினை முடிக்கும் பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மாநில அரசின் தரப்பில் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.