கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற ஜனாதிபதியிடம் முறையிட்ட முதல்வர் நாராயணசாமி…

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை, முதல்வர் நாராயணசாமி, ஜனாதிபதியை சந்தித்து வழங்கினார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரி நிர்வாகத்தில், யாருக்கு அதிகாரம் என்பதில், முதல்வர் நாராயணசாமி – கவர்னர் கிரண்பேடி இடையில், மோதல் நிலவி வருகிறது. கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா, ஊர்வலம் என பல்வேறு போராட்டங்களை, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது, புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக உள்ள, கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜனாதிபதியிடம் மனு அளித்தனர். மேலும், கிரண்பேடியை திரும்ப பெறுவது தொடர்பாக, புதுச்சேரி மக்களிடம் காங்., கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளையும், ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர்.