சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: திருச்செந்தூரில் சி.பி.ஐ., மீண்டும் விசாரணை

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில், சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ததை அடுத்து, டெல்லி சி.பி.ஐ., கூடுதல் எஸ்.பி., விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ., குழுவினர் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில், சி.பி.ஐ., கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான 6 அதிகாரிகள், ஜெயராஜ் உறவினர் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம் பெண் தலைமைக் காவலர் பியூலா செல்வகுமாரியிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.