“மாட்டுச்சாண சிப் குறித்து ஆதாரம் காட்டுங்கள்…” கதிரியாவுக்கு கடிதம் எழுதிய 600+ விஞ்ஞானிகள்..!

பசு சாணத்தால் செய்யப்பட்ட சிப்கள் கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது எனக் கூறிய வல்லபாய் கதிரியாவிடம், 600+ விஞ்ஞானிகள் அது குறித்த ஆதாரங்களை கேட்டுள்ளனர்.
மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக், பசுக்களை பேணுதல், பாதுகாப்பு மற்றும் மேம்பாடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆயோக்கின் தலைவர் வல்லபாய் கதிரியா, பசு சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த கதிர்வீச்சு சிப்களை மொபைல் போன்களில் பயன்படுத்தினால் கதிர்வீச்சு ஆபத்தினை குறைக்கும் எனவும், கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான கல்வியாளர்கள் கூட்டாக ராஷ்டிரிய காம்தேனு ஆயோக்கின் தலைவரான வல்லபாய் கதிரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் “மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சு எதிர்ப்புத் திறன் கொண்டது என்பது குறித்து எத்தனை பேரிடம், எங்கு, எப்போது பரிசோதனை நடத்தப்பட்டது..? இந்த சிப்பை உருவாக்கிய முதன்மை ஆய்வாளர்கள் யார்..? கண்டுபிடிப்புகள் எங்கு வெளியிடப்பட்டன? தரவு மற்றும் சோதனை விவரங்களை வழங்க முடியுமா..?” போன்ற விவரங்களையும் ஆதாரத்துடன் விளக்கம் கேட்டுள்ளனர்.