சிறுநீர் கழித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் – மன்னிப்பு கேட்டதால் வழக்கு வாபஸ்!

மூதாட்டியின் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பின் தேசிய தலைவர் சுப்பையா சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் நேற்று இரவு அந்த மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்டதால் அவர் வழக்கை வாபஸ் பெற்றார்.
சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மருத்துவர் சுப்பையா. இவர் ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசிய தலைவராக உள்ளார். இவ்வளவு படித்திருந்தும், ஆளும் கட்சி ஆதரவு பெற்ற ஏபிவிபியின் தலைவராக இருந்தும் கொஞ்சமும் நாகரீகமின்றி கேவலமாக நடந்து கொண்டுள்ளார் மருத்துவர் சுப்பையா.
இவரது குடியிருப்பின் மற்றொரு பிளாட்டில் கணவரை இழந்து தனியாக வசித்து வரும் 62 வயதான மூதாட்டியுடன் பார்க்கிங் தொடர்பான பிரச்னை எழுந்துள்ளது. அந்த பிரச்னையை தொடர்ந்து மூதாட்டி பிளாட்டின் வாசலில் குப்பை, பயன்படுத்தப்பட்ட மாஸ்க் போன்றவை கொட்டப்பட்டுள்ளன. உச்சக்கட்டமாக ஒரு நாள் சிறுநீர் பரவியிருந்தது.
இதனையடுத்து சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது நீல நிற டிஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்த நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கிறார். அதனை வைத்துக்கொண்டு சுப்பையா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பா.ஜ.க தொடர்புடைய அமைப்பின் தலைவர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுப்பையா சிறுநீர் கழித்ததாக கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பையா நேற்று இரவு அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று சமாதானமாக போய்விடலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். பிளாட்டில் வசிக்கும் மற்றவர்களும் அதையே வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து புகாரளித்த மூதாட்டியின் மருமகன் பாலாஜி வழக்கை வாபஸ் பெற்றார்.