அசாம் வெள்ளம்: 40 லட்சம் பேர் பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்வு
அசாம் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியனோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளத்தால் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை வெள்ளத்தில் சிக்கி 76 பேரும், மின்னல் தாக்கி 26 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டாயிரத்து 389 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள 711 முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அசாம் மாநிலத்துடன் ஒட்டுமொத்த தேசமும் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த பேரிடரில் இருந்து நிச்சயம் அசாம் மக்கள் மீண்டு எழுவார்கள் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.