‘ஆள் பிடிக்கும் அரசியலை, தமிழகத்திலும் நடத்த, பா.ஜ.க, முயற்சிக்கிறது’ – நட்டாவுக்கு ஸ்டாலின் பதிலடி

‘ஆள் பிடிக்கும் அரசியலை, தமிழகத்திலும் நடத்த, பா.ஜ., முயற்சிக்கிறது’ என, நட்டாவுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: பா.ஜ.க, செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ‘வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க., என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் துாண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது’ என்றும், அவதுாறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.
தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி. வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, பாடுபட்டு வரும் கட்சி. நாட்டின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கிற கட்சியாக, பா.ஜ.க, இருக்கிறது. ஆள்பிடிக்கும் அரசியலை, தமிழகத்திலும் நடத்த, பா.ஜ.க, முயற்சிக்கிறது.
தமிழகத்தின் பண்பாட்டிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும், ஒரே எதிரியாக, பா.ஜ.க, திகழ்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.