அரசு ஊழியர்களுக்கு ஆப்பு: தலைவர்கள் எதிர்ப்பு

அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என மு.க. ஸ்டாவின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, விடுப்பு ஊதியம், அகவிலைப்படி, டி.ஏ போன்ற சலுகைகளை 2021 வரையில் நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. தற்போது, இதே பாணியை பின்பற்றி, தமிழக அரசும், மாநில அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை ஜூலை 2021 வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் இழக்க வைத்து மன சோர்வடையச் செய்யும். கொரோனா போரில் கள வீரர்களாக நிற்கும் காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் தலையில் கைவைத்திருப்பது கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவீனங்கள் உள்ளன. அதைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்துக்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியைச் சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?.
பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்காக பலரும் வருங்கால வைப்பு நிதியை (PF)பலரும் நம்பியுள்ள நிலையில், அதற்கான வட்டியை குறைத்திருப்பது சரியல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர். இப்படியான சூழலில் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தல், பி.எஃப். வட்டிக் குறைப்பு போன்ற அறிவிப்புகள் ஏற்கத்தக்கது அல்ல. ” என்று வலியுறுத்தியுள்ளார்.