கம்பு சுற்றி பிச்சையெடுத்த பாட்டி; உதவிக்கு வந்த பிரபலங்கள்
கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வறுமை காரணமாக, வயிற்று பசிக்காக வீதியில் சிலம்பம் சுற்றும் மூதாட்டியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. கொரேனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரது வாழ்க்கை வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த கொடுமையை உணர்த்தும் விதமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பகிரப்பட்டு வருகிறது.
முற்றிலும் நரை விழுந்த முடியும், சுருங்கிய தோலுமாய் காட்சியளிக்கும் மூதாட்டி ஒருவர், இரு கைகளாலும் சிலம்பம் சுற்றி பிச்சை கேட்கும் பரிதாப காட்சி அதில் இடம்பெற்றிருந்தது. அந்த மூதாட்டி சிலம்பம் சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தான் கற்ற வீரக்கலையை வீதிக்குக் கொண்டு வந்து மூதாட்டி ஒருவர் வயிற்றுப் பசிக்கு வழிதேடும் அவலம் அனைவரையும் கலங்க செய்வதாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் சோனு சூட்டும் சிலம்பம் சுற்றும் வைரல் பாட்டிக்கு உதவ முன்வந்துள்ளார். இது குறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அவரை பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைக்குமா? அவரோடு சேர்ந்து ஒரு சிறிய பயிற்சி பள்ளி தொடங்கி நம் நாட்டுப் பெண்களுக்கு தற்காப்பு கலைகளைப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.