தொப்புள் கொடி மூலம் தாயின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு பரவிய கொரோனா!

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும், அது வயிற்றிலுள்ள சிசுவை பெரும்பாலும் பாதிக்காமல் இருந்தது. இந்நிலையில் நாட்டில் முதல் முறையாக தொப்புள் கொடி வழியாக தாயிடமிருந்து வயிற்றிலுள்ள சிசுவுக்கு கொரோனா பரவியுள்ளது.
புனேவை சேர்ந்த கர்ப்பிணிக்கு அறிகுறியற்ற கொரோனா இருந்தது. அந்த வைரஸ் தொப்புள் கொடி வழியாக, கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிரசவத்திற்கு முன்பே பரவியுள்ளது.
புனே சாசூன் பொது மருத்துவமனையில் வைத்து இருவரும் கண்காணிக்கப்பட்டனர். குழந்தை பிறந்த பின் தொப்புள் கொடி, சளி ஆகியவற்றை சோதனை செய்ததில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் குழந்தை குணமானதையடுத்து, தாயும், சேயும் டிஸ்சார்ஜ் செய்ப்பட்டனர்.