“ரூ. 2 ஆயிரம் கோடி மோசடி பேர்வழிகளை கைது செய்ய இன்டர்போல் உதவி கோரப்படும்” – பினராய் விஜயன் அறிவிப்பு

‘பாப்புலர் நிதி நிறுவன மோசடியில் தொடர்பு உடையவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை கைது செய்ய, சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவி கோரப்படும்,’ என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். கேரளாவின் பத்தனம்திட்டாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதிநிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: பாப்புலர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரிக்க ஐஜி ஹர்ஷிதா அட்டல்லூரி மேற்பார்வையில் பத்தனம்திட்டா எஸ்பி சைமன் தலைமையில் 25 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் மகள்கள் 2 பேர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டனர். இதுகுறித்து அறிந்ததும் கேரள போலீசார் டெல்லி சென்று அவர்களை கைது செய்து விசாரணைக்காக பத்தனம்திட்டாவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த நிதிநிறுவன இயக்குனர் தாமஸ் டேனியல் மற்றும் அவரது மனைவியும் இந்த நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரருமான பிரபா டேனியலையும் சங்கனாச்சேரியில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.