உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்: பிரசாந்த் பூஷண் அதிரடி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவதாகவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என, கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், தனது கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துடன் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:
தனது கருத்துக்கள் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போகிறேன். நீதிமன்றம் பலவீனப்பட்டால் ஜனநாயகம் பலவீனமடைந்து விடும். இந்த விவகாரம் நாட்டின் பேச்சுரிமை குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது.
தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரும் உரிமை தனக்கு இருக்கிறது. தனக்கு மனப்பூர்வமாக ஆதரவளித்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.