பொங்கல் வரை 2 சுங்க சாவடிகளில் 50 சதவீத கட்டணம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே சாலைகளை முறையாக பராமரிக்காத 2 சுங்கச்சாவடியில் 50 சதவிகிதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்து வருகிறது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முறையாக சாலையை பராமரிக்காததால் மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் 2 வாரத்துக்கு 50 சதவீத டோல் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாலைகள் கண் துடைப்புக்காக மட்டுமே பராமரிப்பு பணி நடைபெற்றதாக நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
மேலும், தான் வேலூர் சென்று வந்தபோது, சாலைகள் குண்டும் குழியுமாக அதே நிலையில் பார்த்ததாக நீதிபதி சத்தியநாராயணன் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
மதுரவாயல் – வாலாஜா சாலை எப்போது அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் அமைக்கப்பட்டது?
முறையாக பராமரிக்காத சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க எந்த சட்டம் வகைவகை செய்கிறது?
லோனாவாலா, ஆக்ரா நெடுஞ்சாலைகள் மட்டும் தான் தேசிய நெடுஞ்சாலைகளா?
முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவிகிதிம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டித்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கில் பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டனர்.