“இசையமைப்பாளர் பாலபாஸ்கர் மரணத்தில் மர்மம்?”: விசாரணையைக் கையில் எடுத்த சிபிஐ

கேரளாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பாலபாஸ்கர் கடந்த 2018-ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, முறைப்படி சிபிஐ விசாரணையை ஏற்றது.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி தன் மனைவி லட்சுமி, 18 மாதக் குழந்தை தேஜஸ்வி ஆகியோருடன் திருச்சூர் கோயிலுக்குச் சென்று திரும்பினார்.

அப்போது பள்ளிபுரம் எனும் இடத்தில் சிஆர்பிஎஃப் படை முகாம் அருகே பாலபாஸ்கரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலபாஸ்கரின் குழந்தை தேஜஸ்வி அதே நாளில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இசையமைப்பாளர் ஒரு வார தீவிர சிகிச்சைக்குப் பிறகு அக்டோர் 2-ம் தேதி உயிரிழந்தார். அவரின் மனைவி லட்சுமி, கார் ஓட்டுநர் அர்ஜூன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தனர்.

பாலபாஸ்கர், அவரின் குழந்தையின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், குழந்தை தேஜஸ்வி தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும், பாலபாஸ்கர் தலையிலும், மார்பிலும் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பாலபாஸ்கரின் தந்தை உன்னி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய மகன் பாலபாஸ்கர், பேத்தி தேஜஸ்வி கார் விபத்தில் இறந்ததில் மர்மம் இருப்பதாகவும், தங்கம் கடத்தலில் தொடர்பில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும், பாலபாஸ்கர் இறந்தபின் அவரின் வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வங்கிப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரண அறிக்கையை முறைப்படி கேரள போலீஸாரிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று பெற்றுக்கொண்டு அவர்கள் விசாரணையை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பாலபாஸ்கரின் தந்தை உன்னி கூறியதாவது:

”என்னுடைய மகன் விபத்தில் இறந்து 7 மாதங்களுக்குப் பின்னர் தங்கம் கடத்தல் தொடர்பாகத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பிரகாஷன் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரகாஷன் தம்பியிடம் நடந்த விசாரணையில், இசையமைப்பாளர் பாலபாஸ்கரிடம் மேலாளராகப் பணிபுரிந்ததாக தெரிவித்தார்.

என் மகனின் நண்பர்கள் தங்கம் கடத்தலில் கைதாகியுள்ளார்கள் என்பதால் எனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகித்தேன். என் மகன் இறந்தபின் அவரின் வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் இருந்ததையும் அறிந்தேன்.

இதனால் சந்தேகமடைந்து முதல்வரிடம் மனு அளித்தேன். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தும்போது, பாலபாஸ்கர் விபத்துக்குள்ளானபோது கார் ஓட்டுநராக இருந்த அர்ஜூனிடமும் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கும் தங்கம் கடத்தலில் தொடர்புள்ளவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x