விமான விபத்து: திக் திக் நிமிடங்கள் குறித்து புதிய தகவல்கள்

கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு இரண்டு முறை அதனை தரையிறக்க விமானி முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கு மழையே காரணம் என்று கூறப்படுகிறது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்றிரவு 7.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விமானத்தை தரையிறக்குவதில் விமானிக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இரண்டு முறை அங்கு தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது முறையாக விமானத்தை தரையிறக்கும்போதுதான் இந்த விபத்து நேரிட்டது.

மழையின் தீவிரம் காரணமாகவும், தண்ணீர் தேங்கியதாலும், வேகமாக தரையிறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஓடுபாதையை தாண்டி சென்று பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் எதிர்பாராவிதமாக விமானம் இரண்டாக உடைந்தது.
விமானி அறையின் முன்பக்க கதவு வரையிலான ஒரு பகுதி பள்ளத்தில் விழுந்தது. இதுபோன்ற விபத்துகளின்போது விமானம் தீப்பிடிக்கும் என கூறப்படும் நிலையில், மழை காரணமாக அது நிகழவில்லை. இதனால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.