பல பெண்களை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு ; டெல்லி போலீஸ் துணை ஆய்வாளர் புனீத் கிரேவல் கைது!!

பல பெண்களை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு செய்துவந்த டெல்லி போலீஸ் துணை ஆய்வாளர் புனீத் கிரேவல் கைது.
தில்லி காவல்துறை துணை ஆய்வாளர் புனீத் கிரேவல், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, பின்தொடர்வது மற்றும் மோசமான செயல்களை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு பேருக்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அக்டோபர் 17 ஆம் தேதி, தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் மூன்று பெண்கள் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை சாம்பல் நிற பலேனோவில் வந்த ஒரு நபர் தங்களை பின் தொடர்ந்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் கூறினார்கள். நான்காவது நபரும் இதே போன்ற ஒரு புகாரை அளித்தார். இதில் பாதிப்புக்குள்ளான ஒரு பெண் மைனர் என்பதால் போக்ஸோ சட்டம் உட்பட நான்கு தனித்தனியான வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி பேசிய பாதிக்கப்பட்ட பெண் “நான் சைக்கிளில் செல்லும்போது கார் என் அருகில் வருவதை கவனித்தேன். நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்த்து மரியாதை செலுத்தினார். நான் அவரை முன்னேறச் சொன்னேன். அவர் முன்னேறவில்லை. அந்த நபர், துவாரகாவில் உள்ள செக்டர் -14 க்கு வழி கேட்டார், நான் அவரிடம் வழி சொல்லவிருந்தபோது, அவர் மிகவும் அருவருப்புடைய நடவடிக்கையை செய்து காட்டினார்” என்று அந்தப் பெண் கூறினார்.
“நான் கோபமாக அவரை கிளம்ப சொன்னேன். என்னைச் சுற்றி யாரும் இல்லை என்பதையும், கார்கள் அதிவேகமாக அப்பகுதியில் கடந்து செல்வதையும் அப்போது உணர்ந்தேன். காரில் இருந்தவர் மோசமான விஷயங்களைச் சொல்லத் தொடங்கினார், பின்பு உதவிக்காக கத்த ஆரம்பித்தபோது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்” என்று அப்பெண் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட நபரை கண்டுபிடிப்பதற்காக, 200 சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியை கண்டறிந்தனர். இவர் இது போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.