தமிழகத்தில் 71 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!!

தமிழகத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ள 71 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து. இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தது தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம்!
தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 731 ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் மாணவா்களைச் சேர்ப்பதற்கு அங்கீகாரம் வழங்கும்.
இந்நிலையில் தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாத, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 58 கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் ரத்து செய்தது. மேலும் 13 கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறவில்லை.இந்நிலையில் 71 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தடையை மீறி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.