இன்று ஆசிரியர் தினம் ; கவர்னர், முதல்-அமைச்சர், திமுக தலைவர் வாழ்த்து!!

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற தத்துவஞானியும், அறிஞரும், கல்வியாளரும், முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர்களால் சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித் தர முடியும். ஆசிரியர்களின் விழுமிய அனுபவங்களே மனித வரலாற்றில் வாழ்வையும், ஒளியையும் இணைக்கும் புள்ளிகள் ஆகும். இத்தகைய ஒளி அநேக விளக்குகளை ஒளிரச் செய்திடும் கருவியாக உள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களின் உன்னத முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு, தமிழ்நாட்டில் உள்ள நம் ஆசிரியர்கள் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றி வரும் நல்லாசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’, சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி ஆசிரியப் பெருமக்களை கவுரவித்து வருகிறது.
நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரிய பெருமக்களுக்கு இந்நன்னாளில் எனது உளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் பெருமக்களுக்கு ஆட்சியிலிருந்த போதெல்லாம் தி.மு.க. பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி இருக்கிறது. எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு அளிக்கப்படும் நல்லாசிரியர் விருதை 1997-ல் ஆட்சியில் இருந்த போது கருணாநிதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றம் செய்தார். அந்த விருதுகளை வழங்கி ஆசிரியர் பெருமக்களைக் கவுரவித்தார்.
புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர் சமுதாயத்திற்கு எதிரான அம்சங்களை தி.மு.க. ஆணித்தரமாக எதிர்த்து வருகிறது. ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் என்றைக்குமே தி.மு.க. பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று உறுதியளித்து ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.