ஜோ பைடன் பதவியேற்பு விழா அரங்கில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர்- அமெரிக்காவில் பரபரப்பு..

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 20-ந் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.
தற்போதைய அதிபர் டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாவில்லை. இந்தநிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடந்தபோது நடந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கானோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜோ பைடனின் பதவியேற்பு விழா நடக்கும் அரங்கம் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதிக்குள் நுழைய கார் ஒன்று வந்தது.
அப்போது அந்த காரை மறித்த பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழையும் அந்த நபர் வழங்கினார். அந்த அழைப்பிதழை ஆய்வு செய்த போலீசார், அந்த அழைப்பிதழ் போலியானது என கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து காரை ஆய்வு செய்ததில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, கார் ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் அவர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது, நாடாளுமன்ற கலவரத்தை போல நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் தலைநகர் வாஷிங்டன் உள்பட அனைத்து மாகாணங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டனில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.