வனத்துறை காவலர்களால் விவசாயி அடித்துக் கொலை? – ஸ்டாலின் காட்டமான அறிக்கை

தென்காசியில் வனத்துறையினர் விசாரணையில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், சட்டத்தை ஆளாளுக்குக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் கொடூர நிகழ்வின் ரத்தச் சுவடுகள் காயாத நிலையில் இன்னொரு அதிர்ச்சி செய்தி தாக்கியிருக்கிறது. தென்காசி வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான அணைக்கரை முத்து என்பவர் ஜூலை 22ம் தேதி இரவு 11 மணியளவில் சட்டை அணியவும் அவகாசம் தராமல் வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர் கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார்.

அதன்பின் நள்ளிரவு 12.30 மணியளவில் முத்துவின் மூத்த மகன் நடராஜனுக்கு வனத்துறையினர் போன் செய்து, அவருடைய அப்பாவின் சட்டை ஒன்றை எடுத்து வரச் செய்துள்ளனர். அவர்கள் சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்குச் செல்லும்போது, எதிரே வனத்துறையினரின் வாகனம் வந்துள்ளது. அதில், தனது அப்பா பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்து நடராஜன் பதறி, விசாரித்துள்ளார்.

கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அணைக்கரை முத்துவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்கிற அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்துள்ளனர். அணைக்கரை முத்துவின் உடலில் காயங்கள் இருப்பதை அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். இவை அனைத்துமே சந்தேகங்களை வலுப்படுத்தக் கூடியதாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா?

அணைக்கரை முத்து உயிரிழப்புக்குக் காரணமான வனத்துறையைச் சேர்ந்த ரேஞ்சர் நெல்லை நாயகம், பசுங்கிளி, முருகசாமி, சக்தி முருகன், மனோஜ், மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x