இந்துக்களை முன்னேற விடாமல் தடுக்கும் மத்திய பாஜக அரசுக்கு பாடம் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் படிக்க விடாமல், முன்னேற விடாமல் தடுக்கும் மத்திய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம்” என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ளது; அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 18 விழுக்காடு, பட்டியல் பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு என உள்ளது.
ஆனால் இப்போது மத்திய அரசு வழங்கும் இடஒதுக்கீடு பங்கீட்டில் பட்டியலின மக்களுக்கு15 விழுக்காடு இடஒதுக்கீடு தான் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதன்படி 3 விழுக்காடு இடங்களைப் பட்டியலின மக்கள் இழக்க நேரிடுகிறது. இந்த 3 விழுக்காடு இழப்பின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் பட்டியலின மாணவ மாணவியர் எந்தளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை அனைவரும் உணரலாம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு உண்மையில் 50 விழுக்காடு தந்திருக்க வேண்டும; ஆனால் கொடுத்த 27 விழுக்காட்டையே பெற முடியாத நிலை ஒருபக்கம் என்றால் பட்டியலின மக்களுக்கு உண்மையில் தந்திருக்க வேண்டியதை விட மூன்று விழுக்காடு குறைவாகத் தருகிறார்கள். இதுதான் சமூகநீதிக்குச் சாவுமணி அடிக்க முயற்சிக்கும் சதிச் செயலாகும்.
“இந்துக்களுக்காக”க் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் சப்தமிடும் பாஜகவினருக்கு பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்களாகத் தெரியவில்லையா? அவர்கள் என்ன இந்துமத எதிரிகளா? இந்துக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்வது உண்மையாக இருந்தால் பட்டியலின பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி அவர்களுக்கு உரிய இடங்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதமரும் மத்திய பாஜக அரசும் வழங்க வேண்டும்.இது சமூகநீதியால் பண்பட்ட மண்.
இன்றிலிருந்து 98 ஆண்டுகளுக்கு முன் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வகுப்புரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஆட்சி தி.மு.க. மூலவேர்க் கட்சியான நீதிக்கட்சியின் ஆட்சி. அந்த சமூகநீதித் தத்துவத்தில் எந்த அரசு வந்தாலும் எத்தகைய பெரும்பான்மை இருந்தாலும் கை வைக்க முடியாத வகையில் கண்ணை இமை காப்பதுபோல் காத்தும் 69 விழுக்காடுவரை வளர்த்தும் வந்துள்ளோம். பெரியாரும் அண்ணாவும் அன்று நடத்தியதை ஒத்த மாபெரும் போராட்டக் களத்துக்கு பிற்படுத்தப்பட்ட மக்களையும் பட்டியலின மக்களையும் மத்திய பாஜக அரசு கழுத்தை நெரித்துத் தள்ளுகிறது.
திமுகவின் கூட்டணிக்கட்சிகள் தோழமைக் கட்சிகள் சமூகநீதித் தத்துவத்தில் ஆர்வம் உள்ள அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம். மக்கள் மன்றத்தில் நாம் எழுப்பும் குரல் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து பேரதிர்வுகளை ஏற்படுத்துவதாக அமையும்.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள மக்களை (அவர்களின் கணக்குப்படி சொல்வதானால் ‘இந்து’ மக்களை) படிக்க விடாமல் முன்னேற விடாமல் வேலைக்குத் தகுதிப்படுத்தாமல் வேலையைத் தடுக்கும்-தட்டிப் பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம்.
அனிதா உள்ளிட்ட ஏழு உயிர்களை இழந்ததற்குக் காரணம் இந்த சமூகநீதி மறுக்கப்பட்டதால் தானே?. இடஒதுக்கீடு பறிபோகும் விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எப்போதும் போல் அடிமை மனப்பான்மையுடன் அதனைத் தாரை வார்த்து விடாமல் அண்ணாவின் பெயரையும் திராவிடம் என்ற பெயரையும் தாங்கி நிற்பதை நினைத்தாவது கொள்கைக்காக குரல் கொடுக்க வேண்டும். கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலின மக்கள் தங்களது கல்வி உரிமைக்காகவும் வேலை உரிமைக்காகவும் உறுதியுடன் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன்.கல்விக்கான, வேலைக்கான உரிமை மட்டுமல்ல; அதிகாரத்தை அடைவதற்கான உரிமை; அதிகாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை; அரசியல் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை; பா.ஜ.க. அரசால் தட்டிப் பறிக்கப்படும் உரிமை.
அந்த உரிமையை மீட்க ஒன்றிணைவோம் வாரீர் என்று மீண்டும் அழைக்கிறேன். ‘’சமூகநீதியை அடைவதற்கான முட்பாதை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்’’ என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய முட்பாதையை மாற்றிப் பண்படுத்த ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்! இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்தில் நாம் எழுப்பும் குரல் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து பேரதிர்வுகளை ஏற்படுத்துவதாக அமையும்.
இவ்வாறு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.