‘கொரோனாவை விட பழனிச்சாமிதான் மக்களை வதைக்கிறார்’ ஸ்டாலின் ஆதங்கம்

கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மின் கட்டணச் சலுகை வழங்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் அது முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது;

”ஒருபக்கம் கொரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கொரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது”.

”இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை; உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை. கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வரும் போது ஊரடங்கைத் தளர்த்தினார்கள்; மதுக்கடைகளைத் திறந்தார்கள்; பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை”!

”மின்கட்டணம் செலுத்துவதற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30-ம் தேதிவரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். ஜூலை 30-ம் தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?”

”ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள். சில உதாரணங்களை மட்டும் காட்டுகிறேன். சிலருடைய மின்கட்டண அட்டைகள் என்னிடம் இருக்கிறது. எவ்வளவு அநியாயமாக கட்டணங்கள் உயர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா? ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், அரசாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா? “நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகி இருக்கும்” என்று சொல்கிறார்கள்”.

”இது எல்லாவற்றிற்கும் பழனிசாமியின் ஆட்சிதான் காரணம். முதல் நாளிலிருந்து சரிவர நோய்த்தொற்றைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் உங்களுக்குள் அரசியல் செய்துகொண்டு முன்னுக்குப் பின் முரணாக உத்தரவுகளை மாற்றிக் கொண்டே வருகிறீர்கள். பின்னர், “மக்கள் பொறுப்பாக இல்லை. வெளியில் சுற்றுகிறார்கள்” என்று அவர்கள் மேலே பழியைப் போட்டீர்கள். இப்போது மறுபடியும் மக்கள் வீட்டில் இருந்தார்கள் என்று குற்றம் சொல்கிறீர்கள்”.

”எப்போதுதான் ஆட்சியாளர்களிடம் தெளிவு வருமோ என்று தெரியவில்லை? “தவறான அடிப்படையில் மின்சார ரீடிங் எடுத்திருக்கிறார்கள்” என்று மக்கள் சொல்கிறார்கள். நான்கு மாதத்துக்குச் சேர்த்து எடுக்கும்போது ஸ்லாப் மாறும். ஸ்லாப் மாறினால் கட்டணமும் எகிறும். இது மின்சார வாரியத்துக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பளு என்பது சாதாரண மக்களைக் கேட்டால் தான் தெரியும்”.

”சாதாரண நேரம் இல்லை இது; கொரோனா காலம்! எல்லா விதத்திலும் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். இதில் பழனிசாமி அரசாங்கமும் தன் பங்குக்கு மக்களை வதைக்கிறது. மின்சாரம் என்பது மக்களது மிக மிக அவசியத்தேவை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தான் மின்சார வாரியமே இயங்குகிறது. நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என்று மின்சாரச் சட்டத்திலேயே இருக்கிறது. இப்போது பழனிச்சாமி அரசாங்கம் விதித்த கட்டணம் நியாயமான கட்டணம் அல்ல; அநியாயமான கட்டணம்!”

சரியாக சொல்லவேண்டும் என்றால், இந்த மாதிரியான பேரழிவு காலத்தில்தான் மக்களுக்கு தங்களால் முடிந்த சலுகையாக கட்டணச் சலுகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஆனால் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் கட்டணச் சலுகை கொடுத்து இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள். இந்த மாநில அரசுகளால் முடிகிறது; தமிழக அரசால் ஏன் முடியவில்லை?

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x